புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வீரமாமுனிவர் இலக்கிய மன்றத் தொடக்கவிழா, பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் கலைவார விழாப் போட்டிகளின் பரிசளிப்பு விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா அன்று (15.07.2026) பிற்பகல் 3.00 மணிக்கு பேரவை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் அருட்தந்தை K. ஆரோக்கியசாமி, சே.ச. தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்கள் அருட்தந்தை V. ஜார்ஜ், சே.ச. மற்றும் அருட்தந்தை S. ஜெயராஜ், சே.ச. முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக அருள்முனைவர் S. மணிவளன், சே.ச., துணை முதல்வர், புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் சிறப்புரையாற்றினார்.
விழா இறைவணக்கத்துடன் தொடங்கி, மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். தொடர்ந்து திரு. J. ஜோசப் பிரிவின் ராஜ் வரவேற்புரையாற்றினார். பின்னர் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் சிறப்பிக்கப்பட்டு, அவரது கல்விப் பணிகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற கலைவார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மாணவர்களின் கலைத்திறனையும் இலக்கிய ஆற்றலையும் வளர்க்கும் நோக்கில் இவ்விழா சிறப்பாக அமைந்தது.
மாணவர்களின் சார்பில் K. விஜய் பிரகாஷ் (VII-B), D. பரணிதரன் (VI-F), M. யாசர் அராபத் (VI-F) ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக, திரு.J.ஆரோக்கிய செல்வம் பட்டதாரி ஆசிரியர் நன்றியுரை வழங்கினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்ற இந்நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.
Post a Comment
Thanks for reading.